புதுடில்லி: ஜார்க்கண்டில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சி எம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டுப்போட்டதாக கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்திலிருந்து இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி இரு இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேஎம்எம் சார்பில் ஒருவரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிட்டனர். பாஜ ஆதரவுடன் ஒரு சுயேச்சை வேட்பாளரும் களமிறங்கினார்.
வாக்கெடுப்பில் ஜேஎம்எம் வேட்பாளர் பைஜ்நாத் ராம் 30 ஓட்டுகள் பெற்று எளிதாக வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜா 19 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்தார். மேலும் 3 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் தோல்விக்கு கூட்டணி கட்சிகள் மாற்று ஓட்டுப்போட்டதே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் 16 எம்எல்ஏக்களும் ஜேஎம்எம் 4 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி (4 எம்எல்ஏக்கள்) மற்றும் சிபிஐ(எம்எல்) (2 எம்எல்ஏக்கள்) மாற்றி ஓட்டுப்போட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி 28 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.





