பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது தனது வாழ்வின் “பெரும் பாக்கியம்” என தெரிவித்தார்.

பாரீஸ் நிறங்களும் எண்ணங்களும் நிறைந்த நகரம் என குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இங்கு இருப்பது நகரத்திற்கு புதிய வண்ணம் சேர்க்கிறது என்றார். தமிழர்கள், பஞ்சாபிகள், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தோர் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறினார். சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், 140 கோடி மக்களின் வாழ்த்துகளை கொண்டு வந்துள்ளதாகவும் சொன்னார்.

கடந்த 12 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா வளர்ச்சி கண்டதாக அவர் கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பானது, விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் விரிவடைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி பெரிதும் உயர்ந்ததுடன், மொபைல் போன் உற்பத்தி பல மடங்கு அதிகரித்து, அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியோடு மட்டும் நிற்காமல் சமூக மாற்றத்திலும் பிரதிபலிக்கிறது என கூறிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டதாக தெரிவித்தார். வருங்காலத் தலைமுறையினருக்கான வளர்ச்சி, புத்தாக்கம், வாய்ப்புகளை ஊக்குவிக்கும் துறைகளில் முதலீடு நடைபெறுகிறது என்றும், விண்வெளி திட்டங்கள், சோலார் சாதனைகள், பசுமை ஹைட்ரஜன் முதலீடுகள் குறித்து அவர் பேசினார்.

இன்றைய உலகில் வர்த்தகத்துடன் நம்பிக்கையும் சம முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறிய மோடி, இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார். பிரான்சுடனான வர்த்தகம் சீராக வளர்ந்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.