பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கான சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தில் ஜி7 உச்சிமாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

ஸ்லோவேகியா சுற்றுப்பயணத்தில் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், பிரதமர் மோடிக்கு ஸ்லோவேகியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஸ்லோவேகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினிக்கு, ராஜஸ்தான் பிரதாப்கர் பகுதியின் பாரம்பரிய ஆபரணக் கைவினைப் பொருளான ‘தேவா மொடி’ கப்லிங்க்ஸை பிரதமர் மோடி பரிசளித்தார். தனித்துவமான ‘தேவா’ தொழில்நுட்பத்தில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட தங்கத் தகடுகள் வண்ணக் கண்ணாடிகளுடன் இணைக்கப்பட்டு, இயற்கை மற்றும் குறியீடுகளால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவேகியா சபாநாயகர் ரிச்சர்ட் ரசிக்கு, பீஹார்–ஜார்கண்ட் பகுதிகளில் சத் பூஜை போன்ற பண்டிகைகளில் தயாரிக்கப்படும் ‘தேகுவா’ என்ற பாரம்பரிய இனிப்பை வழங்கினார். கோதுமை மாவு, வெல்லம் அல்லது சர்க்கரை, சோம்பு, நெய் ஆகியவற்றால் இது செய்யப்படும். மேலும், சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை மற்றும் ஆச்சார்ய சரகர் தொகுத்த சரக சம்ஹிதை ஆகிய ஆயுர்வேத மருத்துவ நூல்களையும், ஹிம்ரூ டை மற்றும் கைக்குட்டையையும் பரிசாக வழங்கினார்.

பிரான்ஸில், அதிபர் எமானுவேல் மேக்ரானுக்கு ஆந்திராவில் தயாரான கலம்காரி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்; பாரம்பரிய பேனா ஓவிய நுட்பத்தில் மகாபாரதக் காட்சிகள் இடம்பெற்ற இந்த ஓவியத்தை முடிக்க ஆறு மாதங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அதிபரின் மனைவி பிரிகிட் மேக்ரானுக்கு, தெலுங்கானாவின் சாய எதிர்ப்பு நுட்பத்தில் நெய்யப்பட்ட போச்சம்பள்ளி பட்டு சால்வை பரிசளிக்கப்பட்டது.