புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகன் நரேஷ் குஜ்ரால் (78) பெயரும் புகைப்படமும் பயன்படுத்தி, சைபர் மோசடி கும்பல் அவரது நிறுவனத்தில் இருந்து ரூ.7.8 கோடியை பறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரு ஆன்லைன் குறுஞ்செய்தி செயலி மூலம் நிறுவனத்தின் நிதித்துறை ஊழியரை தொடர்பு கொண்ட மோசடிக்காரர்கள், நரேஷ் குஜ்ராலின் பெயர் மற்றும் சுயவிபரப் படத்தை வைத்து, அவசர தொழில் தேவைக்காக குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அது உண்மையான உத்தரவு என நம்பிய ஊழியர், நரேஷ் குஜ்ரால் வழங்கியிருந்த நிதி பரிவர்த்தனை அதிகாரத்தை பயன்படுத்தி, நான்கு நாட்களில் நான்கு தவணைகளாக மொத்தம் ரூ.7.8 கோடியை அனுப்பியுள்ளார்.
இந்த பரிவர்த்தனைகள் ஜூன் 16 அன்று நரேஷ் குஜ்ராலின் மகளின் கவனத்திற்கு வந்ததாகவும், தந்தையிடம் உறுதி செய்தபோது அத்தகைய உத்தரவு எதையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வங்கிகளுடன் ஒருங்கிணைந்து போலீசார் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் ரூ.4 கோடி முடக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.8 கோடி சென்ற பரிவர்த்தனை வழிகளை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.





