சென்னை: உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கும் முடிவில் முதல்வர் விஜய் இருக்கலாம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க. ஒன்றிய செயலர் கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், குற்றச்சாட்டுக்குள்ளானவர்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குற்றச் செயல்கள் நடக்காமல் மக்களை பாதுகாப்பது அரசின் கடமை என கூறிய பழனிசாமி, கடந்த ஒரு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளிடமிருந்தே மக்களை காக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘டெஸ்க் ஜாப்’ போல முதல்வர் பணியை பார்க்கிறார் என விமர்சித்து, அந்த நேரத்திலாவது சட்டம்-ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, த.வெ.க. நிர்வாகி கைது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் பேருந்து நிலையத்தில் 27 வயது பெண்ணிடம் திருத்துறைப்பூண்டி வடக்கு த.வெ.க. ஒன்றிய செயலர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேடையில் கொள்கைகளை பேசுவதோடு நிறுத்தாமல், பெண்களை மதிக்கும் அடிப்படை பண்பும் ஒழுக்கமும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கற்றுத் தரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.