சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர இருப்பதாக பரவும் தகவல்களை திட்டமிட்ட தவறான பிரசாரம் எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நேற்று அளித்த பேட்டியில், மிதுன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே; கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்றும், “என் மகன் அரசியலுக்கு வர மாட்டார்” என்றும் அவர் கூறினார்.

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வென்றதற்கு கட்சித் தலைமையின் செயல்பாடும் தொண்டர்களின் உழைப்பும் காரணம் என பழனிசாமி தெரிவித்தார். தொண்டர்களின் உழைப்பை மதிக்காதவர்கள் எதிர்காலத்தில் அதன் பலனை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

பொதுக்குழுவில் சுமார் 2,500 பேர் பங்கேற்பதால் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் அங்கே கருத்து தெரிவிக்க முடியாத நிலை இருக்கும் எனக் கூறிய அவர், தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருவதாக தெரிவித்தார். அதன் பின்னர் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், விழுப்புரத்தில் 2021 தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், இந்த முறை அந்த மாவட்டத்தில் தனியாகவே வெற்றி பெற்றதாகவும், அவர் பரிந்துரைத்த மூன்று வேட்பாளர்கள் தோற்றதாகவும் பழனிசாமி குறிப்பிட்டார். தன்னை “தொடர் தோல்விகளை கண்டவர்” என விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த அவர், தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாக கூறி, அ.தி.மு.க. செல்வாக்கு குறையவில்லை; வலிமையாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.