முதல் முறையாக வேலை பெற்றுத் தொழிலில் சேர்ந்தும் பி.எப். (Provident Fund) கணக்கில் இணைந்தும் உள்ள 15 லட்சம் ஊழியர்களுக்கு, மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15,000 ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்க உள்ளார்.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்’ மூலம், தகுதியான தனியார் துறை ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.15,000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. ஆறு மாத பணிக்காலம் நிறைவடைந்தால் ரூ.7,500; ஓராண்டு நிறைவடைந்தால் மேலும் ரூ.7,500 என நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த உதவிக்கு தகுதி பெற, முதல் முறை வேலை சேர்ந்தவராகவும் பி.எப். கணக்கில் இணைந்தவராகவும் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் தொடர்ந்திருக்க வேண்டும். மேலும் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு, ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.3,000 வீதம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அரசுத் தகவலின்படி, கடந்த ஏப்ரலில் ஆறு மாத பணிக்காலத்தை நிறைவு செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.446 கோடி விடுவிக்கப்பட்டது; அதில் 18,000 நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், 15 லட்சம் பயனாளிகளுக்கான தவணையாக ரூ.2,400 கோடியை இன்று விடுவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக தொகை செலுத்தப்பட உள்ளது. 2025 ஆகஸ்டில் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 63 லட்சம் பேர் புதிய வேலை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 30% பெண்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 2027க்குள் 3 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.99,446 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.