சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கப்பட்ட விதம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அளித்த புகார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னை நகரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் NOC ஆவணங்களை வழங்கினார். இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், முந்தைய திமுக ஆட்சியில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் NOC பெற ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போதைய த.வெ.க. ஆட்சியில் எந்த செலவும் இல்லாமல் ஆவணங்கள் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், முந்தைய ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல், ‘ஸ்மார்ட்’ வகுப்பறை திட்டம், தனியார் பள்ளி அங்கீகாரம் உள்ளிட்ட பல துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினர். மேலும், மகேஷுக்கு நெருக்கமான மூவர் குழு இந்த வசூலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் கூறுகையில், அந்த குழு சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம் வைத்து செயல்பட்டதாகவும், முறைப்படி வழங்க வேண்டிய அங்கீகாரத்தை பணம் பெற்ற பின்னும் தாமதப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியிலேயே கூட்டமைப்பு வெளிப்படையாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் மகேஷுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.





