ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் நிவரான்பூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது புதன்கிழமை காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் புதன்கிழமை இரவு இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ராஞ்சி நகர எஸ்.பி. பராஸ் ரானா கூறினார். மூவரையும் கோட்வாலி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
விசாரணை நேரத்தில் சயீப் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி ஜன்னலை உடைத்து தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் அவர் பேருந்தில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சன்ஹோ சுங்கச் சாவடி அருகே அவரை கண்காணித்து பிடித்தனர்.
பிடிப்பின்போது போலீசாரின் துப்பாக்கியை பறிக்க முயன்று, போலீசார் மீது மூன்று முறை சுட்டதாகவும், பதிலடி நடவடிக்கையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் எஸ்.பி. தெரிவித்தார்.





