போலி வழக்கறிஞர்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் தேசிய டிஜிட்டல் பதிவேடு உருவாக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

இந்திய பார் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர்கள் விபின் நாயர், பிரஷாந்த் குமார் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர் என்றாலும், அவர்கள் உண்மையில் வழக்கறிஞர்களா என்பதை உடனடியாக சரிபார்க்க ஒருங்கிணைந்த தேசிய தரவுத்தளம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. 23 மாநில பார் கவுன்சில்கள் தனித்தனியாக செயல்படுவதால் தகவல் இடைவெளியை பயன்படுத்தி போலி வழக்கறிஞர்கள் பெருகுவதாகவும் மனுவில் கூறப்பட்டது.

இதற்கு தீர்வாக, வழக்கறிஞர் தொழிலுக்கான தேசிய டிஜிட்டல் பதிவேடு உருவாக்கி, ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் தேசிய அடையாள எண் வழங்க வேண்டும் என மனு வலியுறுத்தியது. கல்வித் தகுதி, ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன், நீதிமன்றங்களும் பொதுமக்களும் சரிபார்க்கும் வகையில் க்யூ.ஆர்.கோடு கொண்ட டிஜிட்டல் சுயவிபரமும் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

மேலும், சமூக ஊடகங்களில் நீதிமன்ற வாதங்கள் மற்றும் தொழில்முறை விளம்பரங்களை வெளியிடுவது பார் கவுன்சில் விதி 36க்கு எதிரானது எனக் குறிப்பிட்டு, வழக்கறிஞர்களுக்கான சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் நடத்தை விதிகளை வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் பிரிவு 49ன் கீழ் உருவாக்க வேண்டும் என மனு தெரிவித்தது.

இந்த தொழில்நுட்ப அடிப்படையிலான யோசனை புதுமையானது என அமர்வு கருத்து தெரிவித்ததுடன், மத்திய அரசு, இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில்கள் மற்றும் பல்கலை மானியக் குழுவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு அடுத்த விசாரணைக்காக ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.