பெங்களூரு: மேகதாது அணை திட்டம் “தென் மாநிலங்களின் இதயம்” என்றும், திட்டத்தை முன்னெடுக்க தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

இதற்கு முன்தினம், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சட்டசபையில் கவர்னர் உரை மூலம் அறிவித்திருந்தது.

விதான் சவுதாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், இந்தத் திட்டம் கர்நாடகா–தமிழகம் இரு மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும் என்றும், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக நன்மை கிடைக்கும் என்றும் கூறினார். தமிழகத்தின் பங்கான 177 டி.எம்.சி. தண்ணீரை திறக்க தயாராக இருப்பதாகவும், திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய நீர் ஆணையமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இது “சமநிலை நீர்த் தேக்கம்” எனக் கூறிய அவர், இத்திட்டத்திலிருந்து பாசனத்திற்காக ஒரு வாளி தண்ணீரும் எடுக்கப்படாது என்றும், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க மட்டுமே மேகதாது அணை நீர் பயன்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார். பெங்களூரில் மக்கள் தொகை அதிகரிப்பதால் காவிரி மட்டுமே நடைமுறை வாய்ப்பாக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு 400 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்ததாக குறிப்பிட்ட அவர், மேகதாது திட்டம் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். அணை கட்டப்பட்டால் கடினமான காலங்களில் தமிழகத்திற்கு உரிய பங்கு தண்ணீரை திறக்க உதவும் என்றும், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு இடமில்லை; இரு மாநில மக்களின் நலனே முக்கியம் என்றும் அவர் கூறினார்.