சாலைகள் உள்ள இடங்களில் நடைபாதை இருப்பதை உறுதி செய்து அதை முறையாக பராமரிக்க வேண்டும்; நடைபாதையில் நடப்பது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுவன் டிரக் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் அமர்வு இந்தக் கருத்துகளை பதிவு செய்தது.
தீர்ப்பை வாசித்த நீதிபதி நரசிம்மா, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாகவும் கவலையின்றியும் நடப்பது மனித வாழ்க்கையுடன் பிணைந்த பிரிக்க முடியாத உரிமை என்றும், இது மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் “சிறப்பு முன்னுரிமை”யை விட மேலானது என்றும் கூறினார். இந்தியா முழுவதும் சுதந்திரமாகச் செல்லும் உரிமையை அரசியல்சாசனம் அங்கீகரிப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், நகரமயமாக்கல் ஆகிய காரணங்களால் அகலமான சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்டு, பாதசாரிகளுக்கான இடம் குறைக்கப்பட்டதாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் நடைபாதைகளும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளுக்கு “தொந்தரவு” போல பார்க்கப்படும் நிலை உருவானதாகவும் கூறப்பட்டது.
இந்த அடிப்படை உரிமையை மேம்படுத்தவும் நடைமுறைப்படுத்தவும் ஒழுங்குமுறை அமைப்பு அவசியம் என நீதிமன்றம் தெரிவித்தது. தேவையான கட்டமைப்பு மற்றும் சட்ட வடிவமைப்பு குறித்து விவாதம் தொடங்க, இந்தத் தீர்ப்பின் நகலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், ஊரக வளர்ச்சி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.





