லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘பி’ லீக் ஆட்டத்தில், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்விட்சர்லாந்து அணி போஸ்னியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 74வது நிமிடத்துக்குப் பிறகு மட்டும் ஸ்விஸ் அணி நான்கு முறை வலை குலுக்கியது.
முதல் பாதியில் பந்தை அதிக நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், போஸ்னியாவின் ஒழுங்கான தடுப்பாட்டத்தை உடைக்க ஸ்விட்சர்லாந்து சிரமப்பட்டது. ஸ்விஸ் வீரர்களின் முயற்சிகளை போஸ்னியா வீரர்கள் தொடர்ந்து தடுத்ததால், முதல் பாதி 0-0 என முடிந்தது.
இரண்டாம் பாதியில் 74வது நிமிடத்தில் இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி ஸ்விட்சர்லாந்துக்காக முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். 80வது நிமிடத்தில் போஸ்னியாவின் தாரிக் ரெட் கார்டு பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை சாதகமாக பயன்படுத்திய ஸ்விட்சர்லாந்து, 84வது நிமிடத்தில் ரூபன் வர்காஸ் மூலம் இரண்டாவது கோலை பெற்றது. தொடர்ந்து 90வது நிமிடத்தில் மன்சாம்பி மீண்டும் கோல் அடித்து ஸ்கோரை 3-0 ஆக உயர்த்தினார்.
கூடுதல் நேரத்தில் (90+3) போஸ்னியாவின் எர்மின் மஹ்மிச் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். ஆனால் ஆட்டத்தின் இறுதி தருணத்தில் (90+7) ஸ்விஸ் கேப்டன் கிரானிட் ஜாகா பெனால்டியை கோலாக மாற்றி 4-1 வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியால் ஸ்விட்சர்லாந்து குரூப் ‘பி’யில் 4 புள்ளிகளுடன் ‘ரவுண்ட் ஆப் 32’ தகுதிக்கு மிக அருகில் சென்றுள்ளது.





