மதுரை: ‘உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்’ (டேப்ஸ்) திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான விதிமுறைகள் உருவாகும் வரை, தகுதியுள்ள அரசு ஊழியர் ஓய்வுபெறுவோருக்கு இடைக்கால நிவாரணமாக ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சி.பி.எஸ்.) அமலுக்கு வந்தது. பின்னர் கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதியில் டேப்ஸ் திட்டம் அறிவிக்கப்பட்டாலும், அதை செயல்படுத்த தேவையான விரிவான விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. 1.1.2026 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு சி.பி.எஸ். முறையா அல்லது டேப்ஸ் திட்டமா என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில் இந்த இடைக்கால ஏற்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர் ஒன்றியத்தின் கோரிக்கையையும், மே 25-ல் வெளியான செய்தியையும் தொடர்ந்து, புதிய விதிமுறைகள் உருவாகும் வரை இடைக்கால ஓய்வூதிய ஏற்பாடுகளை அறிவித்து 16.6.2026 தேதியிட்ட அரசாணை எண் 111 வெளியிடப்பட்டுள்ளது.
1.4.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தும் சி.பி.எஸ். திட்டத்தில் இருந்தும், 1.1.2026 அன்று பணியில் நீடித்திருந்து பின்னர் வயது முதிர்வால் ஓய்வு பெற்றவர்கள் அல்லது பணியின்போது காலமானவர்கள் தகுதி பெறுவர். வயது முதிர்வால் ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை அவசியம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மரணம் தவிர்ந்த காரணங்களால் பணியில் இருந்து விலகியவர்கள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் ஓய்வு பெற்றவர்கள், 1.1.2026க்கு முன்பே ஓய்வு பெற்ற/விலகியவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது.
இடைக்கால ஓய்வூதியம் கடைசி மாத அடிப்படை ஊதியத்தின் 30% அல்லது ரூ.10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதன்மீதான 60% அகவிலைப்படியுடன் வழங்கப்படும்; குடும்ப ஓய்வூதியருக்கும் இதேபோல் பொருந்தும். டேப்ஸ் திட்டத்தில் தொடர விருப்பமில்லாதவர்கள் உடனடியாக விலகி, சி.பி.எஸ். கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் அரசின் பங்களிப்புத் தொகையை வட்டியுடன் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்; இது இறுதியானது, பின்னர் டேப்ஸில் சேர முடியாது. அல்லது தற்போது இடைக்கால ஓய்வூதியத்தைப் பெற்று, டேப்ஸ் விதிகள் வந்த பிறகு முடிவெடுக்கலாம்; பின்னர் விலகினால் இதுவரை பெற்ற இடைக்கால ஓய்வூதியம் (வட்டியுடன்) சி.பி.எஸ். செட்டில்மெண்டில் கழிக்கப்பட்டு மீதித் தொகை வழங்கப்படும். 1.1.2026 முதல் ஓய்வு பெற்றவர்கள் அரசாணை வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் படிவம் 1 அல்லது 2 சமர்ப்பிக்க வேண்டும்; இனி ஓய்வு பெறுவோரும் 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். படிவம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும்; பணப்பட்டுவாடா ஆணை கிடைத்த ஒரு வாரத்திற்குள் கருவூலம் முதல் தவணையை வழங்கி, அடுத்த மாதத் தொகைகள் மாத இறுதி வேலைநாளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





