விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (வி.சி.க.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைத்து கண்டித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. லோக்சபா தொகுதி வாரியாக மண்டல பொறுப்பாளர்கள், சட்டசபை தொகுதி வாரியாக மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றியம் உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் தொடர்கின்றன.

இந்தச் சூழலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல்வேறு பதவிகளைப் பெறுவதாக சில நிர்வாகிகள் திருமாவளவனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், தொடர்புடைய மாவட்ட நிர்வாகிகளை அழைத்து எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் கூறுகையில், சில மாவட்டச் செயலர்கள் தங்களின் மனைவி, தாய், தம்பி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கட்சியின் பிற பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாக புகார் வந்தது. இதையடுத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி பொறுப்பு வழங்க வேண்டும்; தகுதியான மற்றவர்களுக்கு செல்ல வேண்டிய வாய்ப்புகளை தடுக்கக் கூடாது என மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இந்த மறுஆய்வு காரணமாக புதிய நியமனங்களை இறுதிப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.