மதுரையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அதிமுக எம்.பி. இன்பதுரையின் கருத்துக்கு, அதே கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கடுமையாக எதிர்வினை தெரிவித்ததால், கட்சிக்குள் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
இன்பதுரை, ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இருப்பதால் இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கூறினார். லோதா கமிட்டி பரிந்துரைகளை சுட்டிக்காட்டி, ஒரே நபர் ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளில் நீடிப்பது தவறு; அது நிர்வாக நடுநிலையை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சோலைராஜா, ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலராக உள்ளார்; அதே சங்கத்தில் தாம் சீனியர் துணைத்தலைவராக இருப்பதாக கூறினார். மேலும், ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் தலைவராகவும் இருப்பதாக குறிப்பிட்டு, ஒரு விளையாட்டு வீரரை அதிமுக விமர்சித்தது தன்னை பாதித்ததாக தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் கடந்து வரும் பாதையின் கடினத்தன்மை வீரர்களுக்கே தெரியும் என்றும், அவரை விளையாட்டு துறைக்கே அமைச்சராக்கிய முதல்வர் விஜயை பாராட்டலாம் என்றும் அவர் கூறினார். ஆனால், அதிமுக இதை “கீழ்த்தரமாக” விமர்சித்ததாக கூறி கண்டனம் தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனா அமைச்சராவதற்கு முன்பே விளையாட்டு சங்கப் பதவிகளை வகித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி இன்பதுரையை கண்டித்திருக்க வேண்டும் என்றும் சோலைராஜா தெரிவித்தார். பொதுவெளியில் பேசியதற்காக கட்சி தலைமை விளக்கம் கேட்டால் பதிலளிப்பேன்; ஏற்காவிட்டால் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகலாம் என்றாலும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் எனவும் அவர் கூறினார்.





