ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும், தினசரி வழிபாட்டு நடைமுறைகளில் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட ஹிந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக சேர்க்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்ட நாளான நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஜூன் 12 அன்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், நாளில் மூன்று வேளைகளில் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. காலை வழிபாட்டு கூட்டத்தில் தேசிய கீதம், தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரம் மற்றும் சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு வாசிப்பு இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் அனைவரும் இணைந்து உணவுக்கான பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். பள்ளி நேரம் முடிவில் காயத்ரி மந்திரம் மற்றும் சாந்தி மந்திரம் பாட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக பின்பற்றப்படுவதை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிற மத மாணவர்களும் படிக்கும் பள்ளிகளில் ஹிந்து பிரார்த்தனைகளை கட்டாயமாக்குவது ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணிக்கும் முயற்சி என குற்றம்சாட்டி, உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரியுள்ளது.





