டாக்காவில் ஸ்ரீராமர் படத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.
இந்த போராட்டம், வங்கதேசத்தின் மிகப்பெரிய ஸ்ரீராமர் சிலையை அமைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள பதற்றத்தின் பின்னணியில் நடந்தது. ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் நிர்வாகத்தினர், சிலை அமைப்பதற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்ததுடன், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிலை அமைப்புக்கு எதிர்ப்பவர்கள் ராமர் படத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு எதிராக மாணவர்கள் முன்னதாக பேரணி நடத்தியதாகவும், அதை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று நடந்த பேரணியில், தீப்பந்தங்களை ஏந்தியவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்டபடி சென்றனர். ராமர் படத்தை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வுகள், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளன.





