சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில், 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘தினமலர்’ நாளிதழின் அரிய பிரதிகள் மற்றும் ஆவணத் தொகுப்புகள் சிறப்பு காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. 1951-ல் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கிய நாளிதழின் பயணத்தை நினைவூட்டும் வகையில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய தொடக்க காலங்களில் வெளியான நாளிதழ்களில் இடம்பெற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரின் உரைகள் மற்றும் செய்தித் தொகுப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தக் காட்சி நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

சுதந்திர தினம், குடியரசு தினம், பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய நாட்களில் வெளியான சிறப்பு பதிப்புகளும், அக்கால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை பதிவு செய்த செய்தித் தொகுப்புகளும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

முதலாம் குடியரசு தின விழா தொடர்பான செய்திகள், கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கும் திட்டம், நேருவின் உரைகள், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவு தொடர்பான சிறப்பு வெளியீடுகள் உள்ளிட்ட பல வரலாற்றுச் செய்திகள் காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த சிறப்பு காட்சி, ‘காந்தி வேர்ல்ட் பவுண்டேஷன்’ மற்றும் ‘ஹாபி டாக்ஸ்’ இணைந்து நடத்தும் ‘ஹாபி திருவிழா - 2026’ பழம்பொருள் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் பழைய நாணயங்கள், சுவர் கடிகாரங்கள், விளையாட்டு கருவிகள், விளக்குகள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல அரிய சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.