கோடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளர் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் காவலாளர் கொலை செய்யப்பட்டதும், கொள்ளை நடந்ததுமாக உள்ள வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர்.

இதற்கிடையில், அரசு தரப்பு வக்கீல்களாக ஆஜராகி வந்த ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆட்சி மாற்றம் காரணமாக ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது. புதிய அரசு வக்கீல்கள் நியமிக்க கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கை ஜூலை 17க்கு ஒத்திவைத்தது.