புதுடில்லி: வரும் ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரில் இந்திய இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பை உயர்த்த கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்’ கீழ் 15 லட்சம் ஊழியர்களுக்கான முதல் தவணையாக ₹2,400 கோடி ஊக்கத்தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அவர் விடுவித்தார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்து சில மணி நேரங்களுக்கு முன்பே திரும்பியதாக கூறிய மோடி, ஜி7 மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இந்திய இளைஞர்களின் திறன் குறித்து உலக நாடுகள் பேசத் தொடங்கியுள்ளன; அவர்களின் ஆற்றலை அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன என்றார்.
இந்தியா உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இளைஞர்களின் திறமை, கனவுகள், ஆற்றல் ஆகியவற்றில்தான் நாட்டின் வளர்ச்சி அமைகிறது என அவர் கூறினார். திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள், புதிய யோசனைகளுக்கு புத்தாக்க தளம், சுயமாக சாதிக்க விரும்புபவர்களுக்கு முழு ஆதரவு ஆகியவை கிடைக்கச் செய்வதே அரசின் முயற்சி எனவும் விளக்கினார்.
ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சியை எடுத்துக்காட்டிய அவர், ஒரு காலத்தில் 500 ஸ்டார்ட் அப்புகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 2 லட்சமாக உயர்ந்துள்ளன; இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் காணலாம் என்றார். மேலும், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் வழியாக புதிய வாய்ப்புகள் திறக்கப்படுவதாகவும், இதனால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து உலகம் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.





