காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய நிலையின் அடையாளமாகக் கருதப்பட்ட வடகிழக்கு இந்தியா, தற்போது “முன்னேற்றத்திற்கான நுழைவாயிலாக” மாறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் நடைபெற்ற நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் பிரதமருடன் கலந்து கொண்டார். “ஒடிசாவின் மகள்” நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து வழிநடத்தி வருவது பெருமைக்குரியது என்றும், அவர் மயூர்பஞ்ச் மற்றும் ஒடிசாவின் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் மோடி பேசினார்.
ஜனாதிபதி முர்முவின் கிராமத்திற்குச் சென்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என பிரதமர் குறிப்பிட்டார். மேலும், அங்குள்ள பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிட்டதாகவும், அது மறக்கமுடியாத அனுபவமாகவும் “கற்றல் நாளாகவும்” அமைந்ததாகவும் கூறினார்.
கிழக்கு இந்தியாவை மையமாகக் கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையை விளக்கி, “பூர்வோதயா” கொள்கையின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், வடகிழக்கு வளர்ச்சி இந்தியா கட்டமைப்பில் முக்கியமானதாக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ஒடிசா வளர்ச்சியுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டங்களுக்காக சுமார் 47,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என பிரதமர் தெரிவித்தார்.





