டெஹ்ரான்: போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து வகையான நெருக்கடிகளையும் பயன்படுத்தினார் என, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விமர்சித்துள்ளார்.
செய்தி விவரப்படி, பிப். 28 அன்று அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், அப்போது உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார்.
மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் சார்பில் அதிபர் மசூத் பெசெஷ்கியான் டெஹ்ரானில் இருந்து மின்னணு முறையில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட செய்திக்குறிப்பில், “ஒப்பந்தத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற விரக்தியில் டிரம்ப் அனைத்து வகையான அதிகார நெருக்கடிகளையும் பயன்படுத்தினார்; இந்த ஒப்பந்தம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஈரான் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அதிபர் பெசெஷ்கியான் அளித்த உறுதியான உத்தரவாதத்தின் அடிப்படையில், ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





