ஒடிஷாவில் கூரை சூரிய மின்சாரத்திற்கு மாறிய சுமார் 3,000 வீடுகளுக்கு கடந்த மாதம் மின் கட்டணம் பூஜ்ஜியமாக வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ‘பிரதம மந்திரி சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்தின் மானியம் மூலம் பலர் சோலார் அமைப்புகளை நிறுவியதன் விளைவாக இது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 வரை, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைப்புகளுக்கு ரூ.78,000 வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தி, சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கம்.

வீட்டிலேயே மின்சாரம் உற்பத்தி செய்வதால் மாதம் 300 யூனிட் வரை மின் கட்டணத்தில் முழுமையான சேமிப்பு கிடைக்கிறது. மேலும் உபரி மின்சாரம் உற்பத்தியாகி மின் வலையமைப்புக்கு அனுப்பப்பட்டால், அதற்கான தொகையும் பயனருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாம் மாவட்டத்தில், ‘சூரிய வீடு’ திட்டம் மற்றும் ‘யுட்டிலிட்டி லெட் அக்ரிகேஷன் மாடல்’ ஆகியவற்றின் கீழ் 11,187 இடங்களில் சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஒடிஷாவின் பிற மாவட்டங்களை விட கஞ்சாம் மாவட்டம் சோலார் திட்டத்தில் முன்னணியில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். கடந்த மாதம் மட்டும் 2,943 குடும்பங்களுக்கு பூஜ்ஜிய மின் கட்டணம் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெலகுந்தாவைச் சேர்ந்த திரிலோச்சன் மல்லிக், ஒடிஷா அரசு மற்றும் டாடா பவர் இணைந்து செயல்படும் டி.பி.எஸ்.ஓ.டி.எல். (TP Southern Odisha Distribution Limited) உதவியுடன் 3 கிலோவாட் அமைப்பை நிறுவியதாக கூறினார். இதனால் தனது மாதாந்திர மின் கட்டணம் சுமார் ரூ.800-இல் இருந்து பூஜ்ஜியமாக குறைந்ததாகவும் தெரிவித்தார். தெற்கு ஒடிஷா முழுவதும் 16,756 வீடுகளுக்கு சோலார் அமைப்புகளை நிறுவ டி.பி.எஸ்.ஓ.டி.எல். உதவியுள்ளதாகவும், தற்போது 4,102 அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.