தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், தனியாருக்கு சொந்தமான இந்த திறந்தவெளி இடத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிடங்கு சுமார் 30 ஆயிரம் டன் வரை சேமிக்கக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக அரவைக்கு அனுப்பாமல் மூட்டைகள் அப்படியே வைக்கப்பட்டதால், சில சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல் மணிகள் வெளியே சிதறிக் கிடப்பதாகவும், மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு விட்ட நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் 11 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததையடுத்து, திறந்தவெளி கிடங்கில் தண்ணீர் தேங்கி, மழைநீருக்குள் நெல் மூட்டைகள் நனைந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்தனர்.

வியர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல்மணிகள் வீணாகாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அலட்சியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.