சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு கரூர் போலீஸ் படையினர் இன்று (ஜூன் 20) சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஆட்சேர்ப்புக்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் மின் வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரது தம்பி அசோக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இருவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இன்று போலீசார் எந்த வழக்கில் விசாரணைக்காக வந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அசோக்கை போலீசார் தேடுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்குகளில் விசாரணை பெயரளவுக்கு நடந்ததாகவும், தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் விசாரணை சூடு பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.