சென்னை: தமிழக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகளில் எடை குறைத்து அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பெரிய அளவில் நிதி முறைகேடு நடக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது; மாதத்திற்கு 3.63 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசு 2.05 லட்சம் டன் இலவசமாகவும், 92,000 டன் அரிசியை கிலோ ரூ.8.30 விலையிலும் வழங்குகிறது. மீதியை தமிழக அரசு கிலோ ரூ.22.50க்கு வாங்குகிறது.
இந்திய உணவு கழகத்திடமிருந்து வாங்கப்படும் அரிசி, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் லாரிகளில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. 50 கிலோ சாக்குப் பைகளில் அனுப்பப்படும் இந்த மூட்டைகள், சாக்குப் பை எடையுடன் சேர்த்து 50 கிலோ 650 கிராம் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு கடைக்கும் வரும் சில மூட்டைகள் 1 முதல் 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. மேலும், எல்லா கார்டுதாரர்களும் மாதந்தோறும் அரிசி வாங்காததால், 3.63 லட்சம் டனில் சராசரியாக 3 லட்சம் டன் மட்டுமே மாதந்தோறும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
ஒரு மூட்டைக்கு சராசரியாக 1 கிலோ குறைவாக இருப்பதாக எடுத்துக்கொண்டால், சுமார் 60 லட்சம் மூட்டைகளில் 60 லட்சம் கிலோ அரிசி குறையும். வெளிச்சந்தையில் கிலோ ரூ.40 என்ற விலையை அடிப்படையாகக் கொண்டால், மாதத்திற்கு ரூ.24 கோடி, ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு/முறைகேடு இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.





