சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் சென்று வகுப்புகளைத் தொந்தரவு செய்து சமூக ஊடக ரீல்ஸ் எடுத்ததாக கூறப்படும் சம்பவத்தை ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில் 20க்கும் மேற்பட்ட தவெக கட்சியினர் நுழைந்து, முதல்வர் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டி ரீல்ஸ் பதிவு செய்து பின்னர் வெளியிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் தரமிழந்துள்ளதாகவும், பல இடங்களில் சரியான கட்டிட வசதிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் பள்ளிகளின் பெருமையை மீட்டெடுக்கும் பெரிய பொறுப்பு தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் என அவர் எச்சரித்தார். வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதல்வர் விஜயே ஏற்க மாட்டார் என நம்புவதாக கூறிய அண்ணாமலை, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு முதல்வரையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்தினார்.