வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது சென்னையில் நில மோசடி தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது 2024ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு அளித்த புகாரில், 14 கிரவுண்ட் நிலம் தொடர்பான பரிவர்த்தனையில் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார். தன் பெயரில் இருந்த பவர் பத்திரத்தை பெற்றுக்கொண்டு, ஒப்பந்தப்படி பணம் வழங்காமல் மோசடி செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விவகாரத்தின் போது ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தீண்டாமை வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

வழக்கில் சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி, எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் நாராயணன் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். விசாரணை தொடரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.