சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்குவது தமிழக இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றவும், அதில் இருந்த பதிவுகளை நீக்கவும் முடியும்; ஆனால் திட்டத்தின் சாதனைகளையும் அதனால் உருவான நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியாது என்று அவர் கூறினார்.
பல இளைஞர்களின் கனவுகளை நனவாக்க உதவிய திட்டமாக ‘நான் முதல்வன்’ இருப்பதாகவும், அதன் தாக்கம் மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு துணை நிற்பதற்காகவே ‘நான் முதல்வன்’ என்ற தனது கனவுத் திட்டத்தை தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை நிறுத்தும் எந்த முயற்சியும் தமிழக இளைஞர்களின் வளர்ச்சி வாய்ப்புகளை நேரடியாக பாதிக்கும் என்று ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார்.





