நடைபாதையில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமை என்றும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தை விட பாதசாரிகளின் நடமாட்டத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளி சென்ற 5 வயது சிறுவன் லாரி மோதியதில் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும் போது இந்தக் கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. விபத்து நடந்த இடத்தில் நடைபாதை அல்லது பாதசாரிகள் கடக்கும் பாதை இல்லாததே உயிரிழப்புக்கான முக்கிய காரணமாக அமைந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அமர்வு, சிறுவனின் தந்தைக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை ரூ.11,44,628 ஆக உயர்த்தி, இரண்டு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது. இழப்பீட்டை குறைத்திருந்த உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தது.
மேலும், இந்திய எல்லைக்குள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 19(1)(d) பிரிவின் கீழ் “நடக்கும் உரிமை” அடங்கும் என்றும், அது வாழ்வுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்யும் 21வது பிரிவுடன் இணைந்ததாகும் என்றும் நீதிமன்றம் விளக்கியது. ஒரு சாலை இருந்தால் அங்கு நடைபாதை அமைத்து, அதை நகராட்சி/மாநகராட்சி/ஊராட்சி மற்றும் நகர மேம்பாட்டு அமைப்புகள் முறையாக பராமரிப்பது அடிப்படை கடமை என்றும் கூறியது.
நடைபாதைகள் இல்லையெனில் அல்லது பராமரிப்பு குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக பாதசாரிகள் சட்டரீதியாக இழப்பீடு கோரலாம் என்றும், இது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் கிடைக்கும் இழப்பீட்டிலிருந்து தனித்துவமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வாகன மைய அணுகுமுறையிலிருந்து மனித உரிமை மைய சட்ட அமைப்புக்கு மாற்றம் தேவை எனக் கூறி, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் சட்ட ஆணையமும் உரிய சட்ட விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.





