விஜய் மக்கள் இயக்க காலத்திலிருந்து விஜயுடன் பணியாற்றி வந்த பலர் தற்போது தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) மாவட்ட செயலர்களாக உள்ள நிலையில், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கட்சி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போதைய அமைச்சர்களிடையே பதவி நிலை குறித்து கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் த.வெ.க சார்பில் 30 அமைச்சர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் சார்பில் இருவர், வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் சார்பில் தலா ஒருவர் அமைச்சராக உள்ளனர்.

கட்சித் தரப்பில் சிலர் கூறுகையில், மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்களுக்கு முன்னுரிமை என்ற உறுதிமொழியுடன் கட்சி தொடங்கப்பட்டதாகவும், ஆனால் கட்சிப் பதவிகளில் ஒரு பகுதி மட்டுமே மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், வெளியில் இருந்து வந்த சிலருக்கு உயர்பதவிகள் வழங்கப்பட்டதும், சட்டசபை தேர்தலில் கட்சியுடன் தொடர்பு குறைந்தவர்களுக்கும் சீட் வழங்கப்பட்டதாக கூறப்படுவதும் கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்ததாக அவர்கள் சொன்னார்கள்.

ஆட்சி அமைந்த பிறகு சில சீனியர் எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல், புதிய முகங்கள் அமைச்சர்களாக்கப்பட்டதாகவும், இதனால் புகார்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் பதவி கோரியும், சிலர் மாவட்ட செயலர் உள்ளிட்ட அமைப்பு பதவிகள் கோரியும் தலைமையிடம் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல். இதை சமாளிப்பதில் பொதுச்செயலர் ஆனந்த் திணறுவதாகவும், அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் அமைச்சர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.