சென்னை: கோவில் நிதியை பயன்படுத்தி பல்வேறு கோவில்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்த 46 கட்டுமான பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.246 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) மூலம் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் போன்ற கட்டுமானங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திண்டுக்கல், தேனி, பழனி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 27 கோவில்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ள சட்டசபையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

கோவில் நிதியை வணிக கட்டுமானங்களுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் எனக் கூறி, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோவில் நிதி விடுவிக்கப்படவில்லை என அரசு தரப்பு விளக்கம் அளித்தபோதும், நீதிமன்றம் அதை ஏற்காமல் 2025 ஆகஸ்டில் கோவில் நிதியில் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வழிவகுத்த அரசாணைகளை ரத்து செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர், கவர்னர் உரையில் கோவில் நிதி புனிதமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப முன்பு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்து புதிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசின் அறிக்கையில், நீதிமன்ற தடையாணையும் கோவில்களின் நிதிச் சுமையும் காரணமாக இந்த பணிகள் தொடங்கப்படாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டவற்றில் ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டபங்கள் மற்றும் ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாகங்கள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 பணிகள் அடங்கும். இந்த நிதியை கொண்டு கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் பயனளிக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், தஞ்சாவூர், தென்காசி, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கோவை, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இந்த ரத்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.