சியாட்டில்: நாக்-அவுட் சுற்றை உறுதி செய்த அமெரிக்கா
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ லீக் ஆட்டத்தில், நடப்பு நடத்துநர் அமெரிக்கா ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நாக்-அவுட் சுற்றுக்கான தகுதியை உறுதி செய்தது.
மெக்சிகோ, கனடாவுடன் இணைந்து தொடரை நடத்தும் அமெரிக்க அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிக் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இருப்பினும், தொடக்க நிமிடங்களிலிருந்தே அமெரிக்கா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை அழுத்தத்தில் வைத்தது.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவின் பலோகன் அடித்த பந்தை தடுக்க முயன்ற ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், தவறுதலாக பந்தை தனது சொந்த கோல் போஸ்டுக்குள் அனுப்பி ‘செல்ஃப் கோல்’ செய்தார். இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
39-வது நிமிடத்தில் அமெரிக்காவின் அலெக்ஸ் ப்ரீமேன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பால் ஒகான் மோதியதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய ப்ரீமேன் 43-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நடுவர் முதலில் ‘ஆப்சைடு’ எனக் குறிப்பிட்டாலும், ‘வார்’ சோதனையில் அது சரியான கோல் என உறுதி செய்யப்பட்டதால் அமெரிக்கா முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்க முயன்றாலும், அமெரிக்காவின் தற்காப்பு ஆட்டம் உறுதியாக இருந்ததால் கோல் கிடைக்கவில்லை. இறுதியில் அமெரிக்கா 2-0 வெற்றியுடன், சொந்த நாட்டு ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.





