தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு விரைவாக தரிசனம் கிடைக்க, ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய மென்பொருள் உருவாக்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலின் தனிச்சிறப்புகளை அறிந்து அதற்கேற்ற சேவைகளை பெறும் வசதிகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 43,728 கோவில்கள் உள்ளன. தரிசன டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட சேவை தகவல்களுக்காக, தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கோவில்கள் மேலாண்மை திட்ட மென்பொருள் (ஐ.டி.எம்.எஸ்.) தற்போது பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பல கோவில்களில் டிக்கெட் எடுக்கும் போது இணையதள/சர்வர் இணைப்பு சரிவர கிடைக்காததால் தாமதம் ஏற்படுகிறது என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையக வளாகத்தில் மட்டுமே ‘மெயின் சர்வர்’ இருப்பதால், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் மைய சர்வருடன் இணைப்பு கிடைத்தால்தான் வழங்க முடிகிறது; இதனால் ஒரு டிக்கெட்டுக்கு 2–3 நிமிடங்கள் ஆகும், சில நேரங்களில் முற்றிலும் முடங்கி டிக்கெட் வராமலும் போகும் என்றனர். இதனால் நீண்ட வரிசை உருவாகி, குறிப்பாக முதியவர்கள் சிரமப்படுவதாக கூறினர்.
ஐ.டி.எம்.எஸ். மென்பொருள் பழையதாகவும், ஒவ்வொரு கோவிலின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். முக்கிய கோவில்களில் கோவிலுக்குள்ளேயே சர்வர் இணைப்பு வசதி ஏற்படுத்தி சில வினாடிகளில் டிக்கெட் வழங்க வேண்டும், ஒவ்வொரு கோவிலின் சேவைகள் குறித்த தகவல்களை அறிய கூடுதல் வசதிகளை ஐ.டி.எம்.எஸ்.-இல் சேர்க்க வேண்டும், ‘கூகுள் பே’ உள்ளிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தனர்.
மேலும் மென்பொருள் பணிகளை கையாள தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படித்த இளைஞர்களை பணியில் சேர்க்கவும், தொழில்நுட்ப பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண அறநிலையத் துறை அலுவலகத்தில் தனி குழுவை அமைக்கவும் கேட்டுள்ளனர். அதிக பக்தர்கள் வரும் பெரிய கோவில்களில் ஆண்டுக்கு ரூ.1,000 அல்லது ரூ.2,000 போன்ற முன்கட்டணத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கி, கார்டை ஸ்கேன் செய்தவுடன் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பும் முறையையும் கொண்டு வரலாம்; இதனால் கூட்டம் குறையும் என்றும் அவர்கள் கூறினர்.




