தமிழக பா.ஜ.க. அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கத்தில் கட்சியின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அமித் ஷாவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாகவும், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் அமைப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து இரு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் செய்து, பூத் கமிட்டி நிர்வாகிகளின் கூட்டங்களில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பா.ஜ.க. மேலிட அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பல துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்களை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு ஆட்சிச் சாதனைகள் குறித்த தொகுப்புகளை வழங்கி வருவதாகவும், அந்த முக்கிய பிரமுகர்களை அமித் ஷாவும் நேரில் சந்தித்து கட்சியின் ஆட்சி குறித்து கருத்துகளை கேட்டறிய உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.