பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துப் பன்முக நடிகராக அறியப்படும் அன்பு தாசன் பளீச், குடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். தன் பயணத்தை பகிர்ந்த அவர், தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்ததும், திண்டுக்கல்லில் பொறியியல் படித்ததும், பள்ளி நாட்களிலிருந்தே நாடகம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் இருந்ததும் நினைவுகூரினார்.

சினிமாவுக்கு வருவது ஆரம்ப இலக்காக இல்லை என்றும், விமானப்படை தளத்திற்கு அருகே வளர்ந்ததால் விமானப்படையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறினார். அது நிறைவேறாத நிலையில் சென்னை வந்து யூடியூப் சேனலில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தபடியே, சீரியல் மற்றும் குறும்படங்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் டப்பிங் பணியும் செய்ததாக தெரிவித்தார்.

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தில் நண்பன் கதாபாத்திரம் மூலம் நடிப்பில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார். பின்னர் கோலமாவு கோகிலா படத்திற்கான நேர்காணலுக்கு சென்றபோது, நயன்தாரா, யோகிபாபு, அனிருத் போன்றோர் இணைந்த பெரிய படம் என்பதைக் பின்னரே அறிந்ததாகவும், அந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து ஆதித்யா வர்மா, ஓ மன பெண்ணே, ஜாம்பி, அமரன், ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்ததாக கூறினார்.

இந்த இடையில் ஹிந்தி வெப் சீரிஸ் கில்லர் சூப் இல் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்தார். அந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு ஆறு மாதங்கள் நடந்ததாகவும், நாடு முழுவதும் சுமார் 800 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும் கூறினார். ஹிந்தி எழுதவும் படிக்கவும் தெரிந்ததால், ஹிந்தியில் இன்னொரு படத்திலும் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யூடியூபில் இயக்கி நடித்த அனுபவத்திலிருந்து, சினிமாவில் ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஹிந்தி வெப் சீரிஸ் படப்பிடிப்பு தளத்தில் உருவானதாக அவர் கூறினார். நடிகர் நாசர் உதவியால் திரைக்கதை எழுத கற்றுக்கொண்டு புனேவில் படித்து முடித்ததாகவும், தற்போது ஒரு கதையை எழுதி முடித்து அதையே இயக்கி ஹீரோவாக நடிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். குடும்பத்தில் பெண்கள் அதிகம் இருப்பதால், அவர்கள் முகம் சுளிக்காத வகையில் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதாகவும், குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களிலேயே நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.