அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படும் 60 கிலோ வெள்ளிக் கட்டிகள், கோவில் கணக்கு மற்றும் இருப்பு பதிவேடுகளில் இடம்பெறாதது தொடர்பாக உத்தர பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. பதிவுகளில் எந்தச் சுட்டும் இல்லாததால், விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளை ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதற்கு முன்பு, நன்கொடை நிதியில் இருந்து ரூ.24 கோடி வரை மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், நிர்வாகி கோபால் ராய் உள்ளிட்டோரிடம் எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட சில ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, லட்சக்கணக்கான ரொக்கம் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ‘பிராண பிரதிஷ்டை’ காலகட்டத்தில் கோவில் அடித்தளத்தில் வைப்பதற்காக நகை வியாபாரிகள் 60 கிலோ வெள்ளிக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வெள்ளி கோவிலுக்காக பயன்படுத்தப்பட்டதா, அல்லது வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதா என்பதைக் காட்டும் எந்த ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், வெள்ளிக் கட்டிகளை அறக்கட்டளையிடம் ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றதாக நகை வியாபாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு நாட்களாக வெள்ளியின் பாதையை கண்டறிய எஸ்.ஐ.டி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.