சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தில் சத்துணவுக்கு பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 40 மாணவர்கள் உணவின்றி தவித்ததாகவும், பின்னர் அவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களைச் சரியாக செயல்படுத்தத் தெரியாத நிலை இருப்பதாகவும், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற அதிகாரிகளின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விமர்சித்தார்.

மாணவர் எண்ணிக்கை உயர்ந்தால் அதற்கேற்ப உணவின் அளவையும் முன்கூட்டியே திட்டமிடாமல் இருந்தது நிர்வாகத் தவறு எனக் கூறிய அவர், சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும், இனி எந்த அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.