கொச்சி: பணமோசடி தொடர்பான விசாரணையில், கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வீணா விஜயன் ‘எக்சாலாஜிக் சொல்யூசன்ஸ்’ என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2017 முதல் 2021 வரை எந்த சேவையும் பெறாமல் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனம் ரூ.2.78 கோடி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மையமாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதலில் ஜூன் 12ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், உடல்நலக் காரணம் காட்டி விலக்கு கேட்டதால் விசாரணை ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. அன்றைய தினம் வீணா விஜயன் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார்.
விசாரணையின் தொடர்ச்சியாக அவரது வங்கி லாக்கர்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பெறப்பட்ட வாக்குமூலமும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் மேலும் ஆய்வு செய்ய வேண்டியதால் கூடுதல் விசாரணை அவசியம் எனக் கூறி, ஜூன் 29ல் மீண்டும் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.





