ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (ஜி.ஆர்.எஸ்.இ.) நிறுவனத்திற்கு மத்திய அரசு ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்ட ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்குத் தேவையான அதிநவீன போர்க்கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் முக்கிய பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமாக உள்ளது.
1960ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஜி.ஆர்.எஸ்.இ., உள்நாட்டிலேயே 100க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை கட்டி கடற்படைக்கு ஒப்படைத்த முதல் கப்பல் கட்டும் நிறுவனம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.
சீரான நிதி நிலை மற்றும் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளவும், தன்னிச்சையாக செயல்படும் அதிகாரமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் வருவாய் 2021-22 நிதியாண்டில் 1,754 கோடி ரூபாய் இருந்தது; அது 2025-26 நிதியாண்டில் 7,002 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் 190 கோடி ரூபாய் இருந்து 748 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.





