இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், ஜர்தாரியின் கருத்துகள் ஆதாரமற்றவை என்றும், அவற்றை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறினார். இந்தியாவின் உள்விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் பாகிஸ்தானுக்கு மோசமான வரலாறு உள்ள நிலையில் இத்தகைய கருத்துகள் மேலும் அபத்தமானவை என ஜெய்ஸ்வால் தெரிவித்தார். பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரை திட்டமிட்டு குறிவைத்து பாதிப்புக்குள்ளாக்கும் நீண்டகால வரலாறு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியில், ஜர்தாரியின் கருத்துகள் பாகிஸ்தானின் மதவெறி மற்றும் வெறுப்பு நிறைந்த தேசியக் கொள்கைகளால் தூண்டப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்டவை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.