மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பதவி விலகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை த.வெ.க.வில் இணைக்கக் கூடாது என்றும், இடைத்தேர்தல் மையமான அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

திருப்புவனத்தில் பேசிய அவர், மணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும்; இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு போதைப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறிய சண்முகம், “போதை கலாசாரம்” முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வேறு வழிகளில் சென்ற அரசு வருவாயை கருவூலத்திற்கு திருப்பியுள்ளதாக முதலவர் விஜய் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், அது எந்த வகை வருவாய் என்பது தெளிவில்லை; நிதிநிலை அறிக்கையில் தெரியவரலாம் என்றார்.

த.வெ.க.வை மார்க்சிஸ்ட் ஆதரித்தது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், விஜய் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாகவும், அது பா.ஜ. ஆட்சியாகவே மாறும் எனவும் அவர் எச்சரித்தார். ஆதரவு குறித்து பொறுப்பற்ற முறையில் மார்க்சிஸ்ட் செயல்படாது என்றும் அவர் தெரிவித்தார்.