மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமாக மேகதாது திட்டம் இருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்றும் கூறினார். திட்டத்தின் தண்ணீரை குடிநீரைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த மாட்டோம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
4.75 டி.எம்.சி. அளவிலான இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பெங்களூருக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் கிடைக்கும் என்றும், சுமார் 400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இவை திட்ட ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மறு ஆய்வு மனுக்களும் இருமுறை நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை விட “ஒரு துளி” கூட கூடுதலாக வேண்டாம் என்றும், இந்த திட்டம் யாருக்கும் பிரச்னை ஏற்படுத்தாது என்றும் ரெட்டி கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேசியதாகவும், தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.




