ஜி7 உச்சிமாநாட்டின் போது தன்னுடன் புகைப்படம் எடுக்க இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி “கெஞ்சினார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு, மெலோனி கடுமையாக பதிலளித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்து, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு மெலோனி ஆதரவு அளிக்க மறுத்ததே இத்தாலியில் அவரது செல்வாக்கு சரிவதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மெலோனி, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் தொடர்ந்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் அர்த்தமற்றவை என்றார். மேலும், டிரம்பின் நண்பராக இருந்தது தன் செல்வாக்கை உயர்த்த உதவவில்லை என்றும் தெரிவித்தார்.

தன் செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனைப் பொறுத்தது; அதையே தொடர்ந்து செய்து வருகிறேன் என மெலோனி கூறினார். இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் தன் நிலைப்பாடு மாறவில்லை என்றும், தாம் பிரதமராக இருக்கும் வரை அந்த ஒப்பந்தங்கள் மீறப்பட முடியாது என்றும் அவர் கூறினார்.