புதுடில்லி: மருத்துவ இளநிலை சேர்க்கைக்கான நீட் மறுதேர்வு இன்று நாடு முழுதும் 551 நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுகிறது. நாடு முழுதும் 22.79 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர்; தமிழகத்தில் மட்டும் 1.42 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தாண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மூலம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ல் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது; அதன்படி புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டது.
முறைகேடு தொடர்பான விசாரணையில், தேர்வு செயல்முறையில் இடம்பெற்றிருந்த பேராசிரியர்களே மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்; தேர்வு பொருட்கள் முதன்முறையாக விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
என்.டி.ஏ. தரப்பில், தேர்வு நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற பல அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது; தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சி.ஐ.எஸ்.எப். மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்; 6,700 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறுகிறது; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கப்படும். தேர்வர்கள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் மையங்களுக்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்; அதன் பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. சில மாநில அரசுகள் இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்துள்ளன; வெளிப்படையாகத் தெரியும் தண்ணீர் பாட்டில் போன்ற சில பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான மருந்து மற்றும் பழங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி உள்ளது.





