நீட் மறுத்தேர்வு ஜூன் 21 மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 3ம் தேதி தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஜூன் 21ல் மறுத்தேர்வு நடத்தப்படும் என என்.டி.ஏ. அறிவித்தது. வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும், தேர்வு பொருட்கள் முதன்முறையாக விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த மறுத்தேர்வு இந்தியாவில் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது; 22.79 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மாலை 5:15 மணி வரை நடைபெறும்; மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி வழங்கப்படுகிறது.
தேர்வு மையங்களில் சி.ஐ.எஸ்.எப். மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; முந்தைய கசிவில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ‘டெலிகிராம்’ செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.





