புதுடில்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதாக கூறப்படும் நிலையில், கச்சா எண்ணெயை ஏற்றிய 3 டாங்கர் கப்பல்கள் அந்த ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கி பயணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி ஈரான் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், 8.6 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து விட்டதாக கூறினார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 94 இந்தியப் பணியாளர்களுடன் தேஷ் வைபவ், தேஷ் விபோர் மற்றும் சன்மார் ஹெரால்டு ஆகிய இந்தியக் கொடி ஏந்திய டாங்கர்கள் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்ததாகவும், விரைவில் இந்தியாவை அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





