புதுடில்லி: காங்கிரஸ் லோக்சபா எம்.பி. பிரியங்கா காந்தி (சோனியா காந்தியின் மகள்) டில்லி லோதி எஸ்டேட் பகுதியில் அரசு பங்களாவில் வசிக்கிறார். அதற்கு அடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி.க்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா உள்ளது.
பிரியங்கா வீட்டில் வாகனங்கள் அதிகமாக வரும் நேரங்களில், சில கார்கள் பக்கத்து பங்களா அருகே நிறுத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அருகாமை சில நேரங்களில் வசதியாக இருந்தாலும், அதே நேரத்தில் தொந்தரவாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக எம்.பி. வீட்டிற்கு வரும் காங்கிரஸ் தொண்டர்கள், “பக்கத்தில்தானே பிரியங்கா இருக்கிறார்” என நினைத்து நேரடியாக அவரை சந்திக்க முயல்வதாக கூறப்படுகிறது. கடும் பாதுகாப்பு இருந்தாலும், “மேடத்தை பார்க்க வேண்டும்” என கோரிக்கை வைப்பவர்களுக்கு, வீட்டில் சந்திப்பு இல்லை; கட்சி அலுவலகத்தில்தான் வர வேண்டும் என்று பிரியங்கா தெளிவாக மறுத்ததாக தகவல்.
இதையடுத்து, அவர் வெளியே செல்லும் நேரத்தில் ஒருமுறை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சிலர் காத்திருப்பதும் வழக்கமாகியுள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தி அடிக்கடி அந்த பங்களாவிற்கு வந்து பிரியங்காவுடன் நீண்ட நேரம் அரசியல் ஆலோசனை நடத்துவதாகவும், ஆனால் பக்கத்து பங்களாவில் வசிக்கும் மூத்த எம்.பியை அவர் சந்திப்பதில்லை என்றும் கூறப்படுகிறது; இது அந்த எம்.பிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகளே காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





