சென்னை: ரயில்வே சட்டத்தின் கீழ் விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை ரயில்வே வாரியம் திருத்தி உயர்த்தியுள்ளது. இதன் மூலம், முன்பு ரூ.500 வரை இருந்த அதிகபட்ச அபராதம் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய விதிகளின்படி, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்தால் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும்.
ரயிலில் புகைபிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், ரயில் நிலையங்களில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த மறுத்தால் நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுத்து ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே அறிவித்துள்ளது.





